Published : 22 May 2024 03:19 PM
Last Updated : 22 May 2024 03:19 PM

‘தமிழகத்துக்கு நிலக்கரி விற்றதில் அதானி நிறுவனம் மெகா ஊழல்?’ - ராகுல் காந்தி பதிவால் சலசலப்பு

புதுடெல்லி: அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "பாஜக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடி ஜி-யின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை போலி பில்கள் மூலம் மூன்று மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.

அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகியவை இந்த ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்" என்று தெரிவித்துள்ளார். செய்தித்தாள் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையை மையமாக வைத்து ராகுல் காந்தி இப்படி விமர்சித்துள்ளார்.

மெகா ஊழலில் அதிமுக? - அந்த செய்திக் கட்டுரையில், "2014-ல் அதிமுக ஆட்சியின்போது இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றது” என்று கூறப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “24 கப்பல்களில் கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி மொத்தத்தையும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றுள்ளது. இப்படியாக, 2012 - 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.6000 கோடி அளவுக்கு நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2,330 என்ற விலையில் கொள்முதல் செய்த நிலக்கரியை தமிழக அரசிடம் ஒரு டன் ரூ.7650 என்று விலையை உயர்த்தி விற்பனை செய்துள்ளது அதானி நிறுவனம். தரம் குறைந்த நிலக்கரியாக இந்தோனேசியாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தரத்தை உயர்த்தி காண்பிக்கவும், விலையை அதிகப்படுத்தவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளது அதானி நிறுவனம்.

விலையை அதிகப்படுத்துவதற்காக இந்தோனேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு நிலக்கரி கப்பல்கள் வருவதற்கு இடையில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், சிங்கப்பூரில் உள்ள அதானி நிறுவனத்துக்கு நிலக்கரி விற்கப்பட்டு, அதன்பிறகு தமிழகம் கொண்டுவந்தாக போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி மூலம் ரூ.6000 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதே கட்டுரையில் விளக்கமளித்த அதானி நிறுவனம், “ஊழல் எதுவும் நடைபெறவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், “நிலக்கரி சரியான மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட்டது” என்று கூறியுள்ளது. அதானி நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO விளக்கம் அளிக்கவில்லை என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x