Published : 22 May 2024 01:17 PM
Last Updated : 22 May 2024 01:17 PM

400 தொகுதிக்கு மேல் வெற்றி என்ற பாஜகவின் முழக்கம் முழுவதும் கற்பனையானது: சசி தரூர்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற பாஜகவின் முழக்கம் ஒரு முழுமையான கற்பனை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என பாஜக பேசத் தொடங்கியபோதே, இது முழுக்க முழுக்க கற்பனை என்பது தெளிவாகத் தெரிந்தது. கடந்த 2019-ல் நடந்த தேர்தல், மோடி அரசின் முதல் 5 ஆண்டு கால பொருளாதார தோல்வி குறித்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால், புல்வாமா தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் ஆகியவை காரணமாக அது நாட்டின் பாதுகாப்பு குறித்த தேர்தலாக மாறியது. இதன் விளைவாக, 11 மாநிலங்களில் பாஜக கூடுதல் வெற்றியைப் பெற்றது. அதேபோன்ற வெற்றியை பாஜக இம்முறை பெற முடியாது.

இதை நாம் ஏற்கெனவே மிகத் தெளிவாகப் பார்த்து வருகிறோம். பாஜகவின் கோட்டைகள் என குறிப்பிடப்படும் பகுதிகளில் வாக்குப்பதிவு குறிப்பிடத்தக்க சரிவைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி வலுவாக உள்ள இடங்களில் வாக்குப்பதிவு நல்ல எண்ணிக்கையைக் கொண்டிருந்தது. இது காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் இண்டியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. எங்கள் நம்பிக்கை இன்னும் உயர்ந்துள்ளது.

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி, அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதில் எதையும் சேர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் பார்க்கவில்லை. அவர் எங்களால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இந்த விவகாரம் பற்றி தெரிந்தவர்கள் பேசட்டும். மற்றவர்களை விட்டுவிடுங்கள்.

இரண்டாவதாக, இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் எழுப்புவதன் மூலம் பாஜக என்ன விரும்புகிறது - வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் - இவை பற்றியெல்லாம் விவாதிக்கப்படுவதில்லை. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும்.

ராகுல் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கூறிய கருத்து குறித்து கேட்கிறீர்கள். ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மிகவும் பிரபலமான தலைவர் என்பதில் சந்தேகமில்லை. அவரை யார் மீதும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவை பெறக்கூடியவர்.

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் விவகாரத்தைப் பொறுத்தவரை, 1952ம் ஆண்டு ஃபெரோஸ் காந்தி முதன் முதலாக அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அது காந்தி குடும்பத்தின் தொகுதியாக இருந்து வருகிறது. அந்த தொகுதியின் எம்பியாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், தாயின் மரபை மகன் எடுத்துக் கொள்வது என்பது பொருத்தமானதே.

நேரு குறித்த விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்த முழுப் பிரச்சினையும் முற்றிலும் அர்த்தமற்றது. இது பாஜகவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், அவர்கள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திருக்கிறார்கள், அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? நாங்கள் தேர்தலில் போராடுவது கடந்த காலத்தைப் பற்றியதற்காக அல்ல. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்திற்காக” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x