

டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: ஜுன் 4-ம் தேதியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். தேர்தல் முடிவு வெளியாகும்போது, பாஜக தோல்வியடையும். இண்டியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் அமித் ஷா 2 நாட்களுக்கு முன் டெல்லி வந்தார். அவர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் 500 பேர் கூட இல்லை. உடனே அவர் நாட்டு மக்களை திட்டுகிறார். ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் எல்லாம் பாகிஸ்தானியர்கள் என்கிறார்.
டெல்லியில் 56 சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 92 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
எங்களுக்கு வாக்களித்த டெல்லி மற்றும் பஞ்சாப் மக்கள் எல்லாம் பாகிஸ்தானியர்களா? குஜராத், கோவா, உத்தர பிரதேசம், அசாம் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வாக்காளர்கள் எல்லாம் பாகிஸ்தானியர்கள் என நியாயமற்ற வகையில் முத்திரை குத்தப்படுகின்றனர்.
பிரதமர் மோடி தனக்கு அடுத்த நபராக அமித் ஷாவை தேர்வு செய்துள்ளார். அதனால் பெருமிதம் அடைந்துள்ள அமித் ஷா, மக்களை திட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார்.
அவர் இன்னும் பிரதமராகவில்லை. அதற்குள் அவருக்கு மிகுந்த ஆணவம் ஏற்பட்டுள்ளது. அவர் பிரதமர் ஆகப்போவதில்லை. ஏனென்றால் ஜுன் 4-ம் தேதி ஆட்சி அமைக்கப்போவது பாஜக அல்ல. இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.