கடந்த தேர்தலைவிட பாஜகவுக்கு கூடுதல் இடம்: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
Updated on
2 min read

புதுடெல்லி: தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணரா பிரசாந்த் கிஷோர் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நான் கடந்த சில வாரங்களாகவே கூறி வருகிறேன். 2019-ல் பெற்ற இடங்களைப் போலவோ (303 இடங்கள்) அல்லது அதை விட சற்று கூடுதலாகவோ பாஜக பிடிக்கும்.

இந்தத் தேர்தலின் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு எதிராக, பாஜக தலைவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை. மக்களின் ஏமாற்றங்கள், ஆசைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாடு தழுவிய கோபத்தை நம்மால் கேட்க முடியவில்லை.

மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பு, அதிருப்தி அலை மக்களிடம் இல்லை. தேர்தல் முடிவைத் திருப்பிப் போடும் அளவுக்கு மக்கள் மத்தியிலான பரவலான கோபத்தைப் பற்றி நாம் கேள்விப்படவில்லை.

இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக வைத்துக் கொண்டால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற வாக்கியங்களை நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை.

ராகுல் காந்தி ஆட்சிக்கு வரலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். ஆனால், நான் நாடு தழுவிய அளவிலான கருத்துகளைப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இங்கு இல்லை. அதனால் ஆளுங்கட்சி பெறும் சீட்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துவார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு திரும்பும் என்றே நான் நினைக்கிறேன்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜகவின் 370 இடங்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி இலக்கு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பிரசாந்த் கிஷோர் பதில் அளித்து கூறியதாவது: பாஜகவின் கணிப்புகளுக்கு குறைவான சீட் எண்ணிக்கையுடன் தேர்தல் முடிவுகள் வெளியானால் ‘நாங்கள் ஆட்சியமைக்க மாட்டோம்’ என்று அவர்கள் கூறப்போவதில்லை. ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டி இடங்கள் (பெரும்பான்மைக்குத் தேவையான 272 எம்.பி.க்கள்) வாய்க்கிறதா இல்லையா என்பதைமட்டுமே பார்ப்பார்கள். தேர்தல்பிரச்சாரக் களத்தில் அரசியல் சலசலப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கான எந்த அபாயத்தையும் நான் பார்க்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதாகவே தெரிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in