தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

பெங்களூரு / புதுடெல்லி: தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா மற்றும்புதுச்சேரியின் நீர்வளத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது தமிழக அரசின் தரப்பில், “உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023-ம்ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2024-ம் ஆண்டு மே 15-ம் தேதிவரை கர்நாடக அரசு 175.873 டிஎம்சிநீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் காலகட்டத்தில் 79.418 டிஎம்சி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 96.456 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.

இதுதவிர, பிப்ரவரி முதல் மே 15-ம் தேதிவரை பிலிகுண்டுலுவில் 8.710 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.705 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில் 6.005 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 18.040 டிஎம்சி நீரே இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 10 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 6 டிஎம்சி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.17 டிஎம்சி நீரையும் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்த‌ப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், “கர்நாடகாவில் பிப்ரவரி முதல்மே மாதம் இரண்டாவது வாரம் வரைமழை பெய்யவில்லை. கடந்த ஒருவாரமாக மழை லேசாக பெய்துவரு கிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி,ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4அணைகளிலும் குறைந்த அளவிலேயே நீர் இருப்பில் உள்ளது. இந்த நீரைக் கொண்டே பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது” என தெரி விக்கப்பட்டது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “குறைந்த மழை பொழிவுக் காலங்களில் மே மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திறக்கப்பட‌ வேண்டிய நீரும் பிலிகுண்டுலு அளவை நிலையத்தில் செல்வதை கர்நாடகா உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

நல்ல மழை பெய்தால் தமிழகத்துக்கு நீரை திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in