

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்ற காவல் முடிவுக்கு வருவதால் அவரை நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் காணொலி மூலம் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூன் 3-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இவ்வழக்கில் கவிதாவுக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அமலாக்கத் துறை தரப்பில், “கவிதா உட்பட இவ்வழக்கில் தொடர்புள்ள தாமோதர், பிரின்ஸ் குமார், அர்விந்த் சிங், சரண் ப்ரீத் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவிதாவை நாங்கள் விசாரணைக்கு எடுக்க தேவை இல்லை. அதேசமயம் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.