Last Updated : 25 Apr, 2018 08:41 AM

 

Published : 25 Apr 2018 08:41 AM
Last Updated : 25 Apr 2018 08:41 AM

நீதிபதி பதவி நீக்க விவகாரத்தில் கபில் சிபல் இரட்டை நிலை

நீதிபதி பதவி நீக்க விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் இரட்டை நிலையை கடைப்பிடித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான 7 கட்சிகள் அடங்கிய கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க கோரிக்கை அளிக்கப்பட்டது. மொத்தம் 64 எம்பி-க்கள் கையெழுத்திட்ட அந்த கோரிக்கையை குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு நேற்று முன்தினம் சட்டப்படி நிராகரித்து உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சி எம்பி-க்கள் குழுவுக்கு தலைமையேற்று இக்கோரிக்கையை அளித்த கபில் சிபல் 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார். அப்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு அவரை பதவி நீக்க (இம்பீச்மென்ட்) முயற்சி எடுக்கப்பட்டது. அவரை நீக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேறி மக்களவைக்குப் போனதும், சவுமித்ரா சென் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார்.

அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கபில் சிபல், “நீதிபதி பதவி நீக்க நடைமுறை முழுக்க முழுக்க சட்ட விரோதமான ஒன்று. நீதிபதி ஒருவர் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தால் கட்சிகள் தங்கள் கட்சி எம்பி-க்கள் ஓட்டுப் போடுவதை உறுதி செய்ய கொறடா உத்தரவு பிறப்பிக்க வேண்டியது வரும். அதை மீறி எம்பி-க்கள் மனசாட்சிப்படி சுதந்திரமாக ஒட்டுப் போட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘50 எம்பி-க்கள் சேர்ந்து கையெழுத்திட்டு விட்டால், ஒரு நீதிபதி மீது குற்றம் சாட்ட முடியும் என்பது எந்த வகையில் நியாயம்? இது என்ன நடைமுறை?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், தற்போது அதே கபில் சிபல் தலைமை நீதிபதிக்கு எதிராக மனு தாக்கல் செய்து தனது இரட்டை நிலையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் என் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை’ என்று பதிலளித்து மேலும் குழப்பியுள்ளார். அவரது பதில் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பாலி நாரிமன் கருத்து

சட்ட நிபுணரும் மூத்த வழக்கறிஞருமான பாலி நாரிமன் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து மட்டுமே குடியரசு துணைத் தலைவர் முடிவெடுக்க முடியும். குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்பதால் அதனை நிராகரித்து அவர் முடிவெடுத்திருப்பது சரியான முடிவுதான். அந்த முடிவை எதிர்த்து யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். அப்படி வழக்கு தொடரப்பட்டால், அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரிக்க முடியாது. அவர் வேறு நீதிபதியிடம் தான் அளிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற முறையில் அவர் யாரிடம் வேண்டுமானாலும் வழக்கை ஒப்படைக்கலாம். அதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. நீதிபதிகள் வரலாம்; போகலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் என்ற அமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

தலைமை நீதிபதிக்கு எதிராக 4 நீதிபதிகள் பேட்டி அளித்ததால் அவர்கள் இந்த விவகாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. இது தவறு. அவர்களுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கறிஞர்களாகவும் உள்ள சில எம்பி-க்களே இந்த மனுவில் கையெழுத்திட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு பாலி நாரிமன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x