

அசாம் மாநிலம் கோலாகாட் நகரில் புதன்கிழமை போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். கோலாகாட் நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில எல்லையில் உள்ள கோலா காட் மாவட்டத்தின் உரியாம்காட் பகுதியில் உள்ள கிராமத்தினர் மீது நாகாலாந்து மாநிலத்தவர் கடந்த சில நாட்களாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் நிகழ்ந்து வரும் இந்த வன்முறையில் 9 பேர் கொல்லப் பட்டனர். 200 வீடுகள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. 10 ஆயிரம் பேர், வீடுகளிலிருந்து வெளியேறி அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள ரங்காஜியோன் பகுதியில் செவ்வாய்க்கிழமை சில வீடுகளுக்குள் புகுந்த போலீஸார் அங்கிருந்தவர்களை வெளியே இழுத்து வந்து அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து புதன் கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அசாம் முதல்வர் தருண் கோகோய்க்கு எதிராக கோஷம் எழுப்பினர். துணை கமிஷனர் அலுவலகத் துக்கு ஊர்வலமாக சென்ற பொதுமக்களுக் கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சிலர் கமிஷனர் அலுவலகத்துக்கு தீ வைக்க முயன்றனர். ஒரு காவல் நிலையமும், மருத்துவமனையும் தாக்குதலுக்கு இலக்கானது. தொடர்ந்து போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதில் போலீஸார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி, வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால் போலீஸா ரால் அவர்களை விரட்டியடிக்க முடிய வில்லை. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். வன்முறையை அடுத்து கோலாகாட் நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
‘‘மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நாகாலாந்து எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. இதனால் அசாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அசாமில் பிற மாநிலத்தவர் நடத்தும் வன்முறையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.
அசாமில் எல்லையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எனக்கும் பொறுப்பு உண்டு. ஆனால் பிரச்சினைக்குரிய அசாம் நாகாலாந்து எல்லை பாதுகாப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைதான் ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை மாநில அரசிடம் அளித்தால் அசாம் மக்களுக்கு என்னால் முழு பாதுகாப்பை அளிக்க முடியும்.
வீடு புகுந்து பொதுமக்களை போலீஸார் தாக்கினர் என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கோகோய் கூறியுள்ளார்.
வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தருண் கோகோயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வன்முறையை முடிவுக்கு கொண்டு வர கூடுதல் படையை அனுப்புமாறு ராஜ்நாத்திடம் கோகோய் கேட்டுக் கொண்டுள்ளார்.