Published : 18 May 2024 09:32 AM
Last Updated : 18 May 2024 09:32 AM

5-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்: இன்று மாலையுடன் நிறைவு

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பல்வேறு தொகுதிகளில் விஜபி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.

உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார். பிஹாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.

மும்பை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பூஷண் பாட்டீல் போட்டியிடுகிறார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் பயாஸ் அகமது மிர் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் 49 மக்களவைத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x