ஜார்க்கண்டில் டெண்டர் ஒதுக்கீட்டுக்கு அமைச்சர் ஆலம்கீர் 1.5% கமிஷன் பெற்றார்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் டெண்டர் ஒதுக்கீட்டுக்கு அமைச்சர் ஆலம்கீர் 1.5% கமிஷன் பெற்றார்: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம், ஒவ்வொரு டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் 1.5 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளார் என்று அமலாக்கத் துறை ராஞ்சியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

டெண்டர் ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் மற்றும் அவரது தனிச் செயலர் சஞ்சீவ் லாலுக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்த அமலாக்கத் துறை, இது தொடர்பாக இம்மாதத் தொடக்கத்தில், தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் வீட்டுப் பணியாளர் ஜஹாங்கிர் ஆலமின் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது ரூ.33 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சஞ்சீவ் லால் மற்றும் ஜஹாங்கிர் ஆலம் இருவரையும் அமலாக்கத் துறை கைது செய்தது.

ஜஹாங்கீர் ஆலம் சில காலம் அமைச்சர் ஆலம்கீரின் வீட்டில் பணிபுரிந்து இருக்கிறார். இதன் அடிப்படையில் ஆலம்கீரிடம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை கடந்த புதன்கிழமை அன்று அவரை கைது செய்தது. அவரது கைது குறித்து அமலாக்கத் துறை நேற்றுமுன்தினம் ராஞ்சியில் உள்ள பண மோசடிதடுப்பு நீதிமன்றத்தில் கூறுகையில், “ஒவ்வொரு டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் அதன் தொகையில் 1.5 சதவீதம் கமிஷனாக அமைச்சர் ஆலம்கீர் ஆலமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் மூலம் கமிஷன் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த கமிஷன் பணம் உதவிப் பொறியாளர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

6 நாள் காவல்: இந்த ஊழலில் ஆலம்கீர் ஆலமுக்கு முக்கியப் பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. அமைச்சர் ஆலம்கீரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in