Last Updated : 23 Apr, 2018 02:54 PM

 

Published : 23 Apr 2018 02:54 PM
Last Updated : 23 Apr 2018 02:54 PM

நாடு பற்றி எரிந்தாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள்: ராகுல் காந்தி கடும் தாக்கு

 இந்த நாடு பற்றி எரிந்தாலும், பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், சிறுபான்மையினர் மிரட்டப்பட்டாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள், விருப்பமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்

அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் இன்று டெல்லியில் பேரணியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அரசியல் சாசனம் வழங்கிய முக்கிய அமைப்புகள் அனைத்தும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன. நாடாளுமன்றம் முடக்கப்பட்டு, மூடப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டார்கள். நிரவ் மோடியின் வங்கி மோசடி, லலித் மோடியின் மோசடி குறித்து பிரதமர் மோடியை 15 நிமிடங்கள் பேசுங்கள் என்று கூறினால் ஓடி விடுகிறார்.

பிரதமர் மோடிக்கு தலித் மக்களையும், பெண்களையும், சிறுபான்மை முஸ்லிம்களையும் சமூகத்தில் உயர்மட்டத்துக்குக் கொண்டு வருவதில் எந்தவிதமான விருப்பமும் இல்லை. அதேபோல விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்கவும், புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கவும் எண்ணம் இல்லை.

நாட்டில் தலித் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் எதிராக அட்டூழியங்களும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர், விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பெண் குழந்தைகளைக் காப்போம் என்று மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால், இப்போது, அந்த வாசகத்தை தங்கள் கட்சிக்குள் சொல்லிக்கொள்கிறார். பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதிலும், உன்னாவ் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதிலும் பாஜகவினருக்குத் தொடர்பு இருக்கிறது ஆனால், அவர்களைப் பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை.

பிரதமர் மோடியும், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அமைப்புகளை அழித்து வருகின்றன. நாடாளுமன்றத்தை மூடிவிட்டார்கள், அடுத்ததாக உச்ச நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார்கள்.

நீதிமன்றம் சிதைக்கப்படுகின்றன எனக் குற்றம் சாட்டி 4 மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்கள். வழக்கமாக நீதிகேட்டு மக்கள்தான் நீதிமன்றத்துக்குச் செல்வார்கள். ஆனால், முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் மக்களிடம் நீதி கேட்டனர். பாஜக, ஆர்எஸ்எஸ், பிடியில் சிக்கி நாடாளுமன்றம் மூடப்பட்டுவிட்டது. உச்ச நீதிமன்றத்தைக் காலால் மதித்து நசுக்குகிறார்கள். நிரவ்மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோரை நாடுகடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த நாடு பற்றி எரிந்தாலும், பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும், தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், சிறுபான்மையினர் மிரட்டப்பட்டாலும், மீண்டும் பிரதமர் ஆவதுதான் மோடிக்கு குறிக்கோள், விருப்பமாகும்.''

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x