

காங்கிரஸ் சார்பில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது முழுக்க, முழுக்க பொய் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திண்டோரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “மதத்தின் அடிப்படையில் நாட்டில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
மதத்தின் அடிப்படையில் மத்திய பட்ஜெட்டை பிரிக்கவும் அந்த கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதன்படி காங்கிரஸ் சார்பில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் விநோதமாக உள்ளன. அவருக்கு உரை தயாரிக்கும் எழுத்தாளர்கள் சமநிலையை இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
‘இந்து- முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால், அந்த நாள்முதல் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்' என்று பிரதமர் மோடி அண்மையில் கூறினார். ஆனால் அடுத்த நாள் அவரே, இந்து-முஸ்லிம் பிரிவினையைத் தூண்டுகிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை முஸ்லிம்களுக்காக செலவிட திட்டமிட்டு இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். இது முற்றிலும் தவறானது.
காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு தனிபட்ஜெட்டும், இந்துக்களுக்கு தனி பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் என்று பிரதமர் குற்றம் சாட்டி உள்ளார். இது முழுக்க முழுக்க பொய்.
சட்டப்பிரிவு 112-ன்படி ஆண்டுக்கு ஒரு மத்திய பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். சட்டத்தை மீறி எவ்வாறு இரு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ய முடியும்?
மக்களவைத் தேர்தலில் மீதமுள்ள காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளையும் அபத்தமான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவார் என்பது தெளிவாகிறது.
அவரது பேச்சை இந்திய மக்கள் மட்டும் கேட்கவில்லை. ஒட்டுமொத்த உலகமும் அவரது பேச்சை உன்னிப்பாக கண்காணித்து அலசி ஆராய்ந்து வருகிறது. பிரதமரின் பேச்சால் இந்தியாவின் பெயர், புகழுக்கு இழுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.