

உரி அடிக்கும் விழாவில் கலந்துக்கொள்ள 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்குமுன், இந்த விழாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என்று பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை பிறப்பித்தது.
மேலும், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் குழந்தை உரிமைகளைப் பாதுகாக்கும் ஆணையம் அளித்துள்ள வழிமுறைகள், விழா நடத்தும்போது கடைப்பிடிக்கப்படுகிறதா என்று அம்மாநில அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ண ஜெயந்தியன்று மகாராஷ்ட்ராவில் உரி அடிக்கும் திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப் நரிமான் கொண்ட அமர்வு, இந்த இடைக்கால உத்தரவு தொடர்பாக மகாராஷ்ட்ரா அரசு மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த உத்தரவு குறித்து, அவர்கள் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் பம்பாய் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பம்பாய் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உரி அடிக்கும் விழா நடைபெறும்போது, பல விபத்துகள் நிகழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, விளையாட்டின்போது உருவாக்கப்படும் மனித பிரமிட் வடிவம் 20 அடிக்குள் இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும் என்று மகாராஷ்ரா அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு முன்னதாக, விழாவில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு உடல்நலம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.