Published : 16 May 2024 12:47 PM
Last Updated : 16 May 2024 12:47 PM
வாராணசி: மக்களவைத் தேர்தலில் வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் ஷ்யாம் ரங்கீலாவின் வேட்புமனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிகரித்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர். 28 வயதாகும் இவரின் நையாண்டிகளால் ஒருகட்டத்தில் இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டே இவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது பாஜகவை ஆதரித்தவர் இவர். எனினும், சில ஆண்டுகளில் பாஜகவை எதிர்த்து நையாண்டி செய்ய ஆரம்பித்தார்.
தொடர்ந்து 2022ம் ஆண்டு ராஜஸ்தான் ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அரசியல் தளத்தில் இயங்கி வந்த ஷ்யாம் ரங்கீலா, தற்போது நடைபெற்றுவரும் மக்களவை தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக அறிவித்து சில நாட்கள் முன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு அவரது வேட்புமனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தேர்தல் பிராமண பத்திரத்தில் குறைகள் இருந்ததாலும், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்றப்படும் நடைமுறை சம்பிரதாயங்களை பின்பற்றவில்லை என்பதாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது ஷ்யாம் ரங்கீலா சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.
தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்தது தொடர்பாக பேசியுள்ள ஷ்யாம் ரங்கீலா, “நான் தாக்கல் செய்த ஆவணங்களில் குறையுள்ளது என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்ய எனது வழக்கறிஞரை என்னுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அனுமதிக்கவில்லை. என்னை தனிமைப்படுத்தி வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்தனர். என் நண்பரை தாக்கினர். பிரதமர் மோடி நடிக்கலாம், அழுகலாம். நான் இங்கு அழப்போவதில்லை. நேற்று 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இன்று 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா? எனத் தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT