

மக்களின் கஷ்டங்களை கேட்க பிரதமருக்கு நேரமில்லை. ஆனால், சம்பந்தமில்லாத விஷயங்களை மட்டுமே அவர் பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அ
மேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவுக்கு ஆதரவாக மொஹியா கேசரியா கிராமத்தில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரியங்கா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மக்களின் அவலநிலை குறித்து கேட்டறியாமல் பொருத்தமற்ற பல விஷயங்களை பேசுகிறார். அவர் மக்களை நேசிக்கவில்லை. எந்தவொரு விவசாயி வீட்டுக்கும் செல்லவில்லை.
உயரமான வாகனத்தில் பாதுகாப்பு பணியாளர் மத்தியில் நின்று கையசைத்து ரோட் ஷோ நடத்துவது மட்டுமே பிரதமரின் வேலை என்றாகிவிட்டது. அப்புறம் எப்படி மக்கள் படும் துயரங்கள் அவருக்கு தெரியும். தொழிலதிபர்கள் மட்டுமே பிரதமருக்கு நண்பர்களாக இருக்க முடியும். எனது சகோதரர் ராகுல் காந்தி 4,000 கி.மீ. நடைபயணம் செய்து நாட்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போதாவது 10 ஆண்டுகளில் பிரதமர் என்ன செய்துள்ளார் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும். மசூதி, கோவில், மங்களசூத்திரம் பற்றி கேட்க யாரும் விரும்பவில்லை என்பதை இனியாவது மக்கள் பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும். தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றி பேசுமாறு மட்டுமே அவரிடம் கூற வேண்டும்.
அமேதி எம்.பி. ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல் மதத்தின் அடிப்படையில் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் தெளிவுடன் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.