

புதுடெல்லி: உத்தராகண்ட் காட்டுத் தீயை அணைக்க போதிய நிதி ஒதுக்காதது ஏன்? எனவும், வன ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது ஏன்? எனவும் மத்திய அரசு மற்றும் உத்தராகண்ட் அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தராகண்ட் வனப் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 1000-க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் 1,100 ஹெக்டேர் மொத்த வனப் பகுதியில் 0.1 சதவீதமும், உத்தராகண்ட் நிலப் பகுதியில் 45 சதவீதமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயை அணைக்க ரூ.10 கோடி தேவை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு ரூ.3.15 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இதனால் முறையான உபகரணங்கள் இன்றி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், வனத்துறை அதிகாரிகள் பலர் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள் இந்தமாத துவக்கத்தில் உத்தராகண்ட் வனப்பகுதியில் தண்ணீர் ஊற்றி காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அல்மோரா மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் காட்டுத் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
உத்தராகண்ட் காட்டுத் தீ தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், எஸ்.வி.என்.பாட்டி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தராகண்ட் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வனத்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு அனுப்ப வேண்டாம் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் வனத்துறை அதிகாரிகளை, தேர்தல் பணிக்கு அனுப்பிய உத்தரவை திரும்ப பெறுவோம்’’ என்றார்.
இந்த பதிலில் திருப்தியடையாத நீதிபதிகள், ‘‘அரசின் செயல்பாடு வருத்தம் அளிக்கிறது. மழுப்பலான காரணங்களை நீங்கள் கூறுகிறீர்கள். காட்டுத் தீயை அணைக்க ரூ.10 கோடி கேட்கப்பட்ட நிலையில் நீங்கள் ரூ.3.15 கோடி மட்டுமே வழங்கியுள்ளீர்கள். ஏன் நீங்கள் போதிய நிதியை வழங்கவில்லை. காட்டுத் தீ பரவும் நிலையில் வனத்துறை ஊழியர்களை நீங்கள் தேர்தல் பணியில் அமர்த்தியது ஏன்?’’ என கண்டனம் தெரிவித்தனர்.