Published : 16 May 2024 04:55 AM
Last Updated : 16 May 2024 04:55 AM

தேர்தல் வன்முறை: ஆந்திர தலைமை செயலாளர், டிஜிபிக்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நேரத்திலும், தேர்தலுக்குப் பிறகும் திருப்பதி, சந்திரகிரி உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் எதிரணியை சேர்ந்த தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜகவினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி, போலீஸ் டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா ஆகியோ ருக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இருவரும் தனித்தனியாக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மனில் குறிப்பிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் ஜவஹர் ரெட்டி நேற்று தமது அலுவலகத்திற்கு டிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவை அழைத்து ஆலோசனை நடத்தினார். திருப்பதி, பல்நாடு, சத்யசாய் ஆகிய மாவட்டங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களிடம் இருந்து தகவல் பெற்றுதேர்தல் ஆணையத்திடம் அறிக்கைசமர்ப்பிக்க அப்போது முடிவு செய்யப்பட்டது.

பல்நாடு மாவட்டத்தில் மாசர்லா, குரஜாலா மற்றும் நரசராவ் பேட்டை பகுதிகளில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடக்காதவாறு 144 தடை உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் நேற்று பிறப்பித்தார்.

நந்தியாலா மாவட்டம், ஆள்ளகட்டா தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் அகில பிரியாவின் பாதுகாவலர் நிகில் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. நிகில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அகில பிரியாவின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வேகமாக வந்த கார் நிகில் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் சுதாரித்து எழுந்த அவரை கொல்வதற்காக அந்த காரில் இருந்து 3 பேர் கத்தியுடன் ஓடி வந்தனர். இதையடுத்து நிகில் அமைச்சரின் வீட்டுக்குள் ஓடி உயிர் தப்பினார். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x