ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையர் தகவல்

ஆந்திராவில் விடிய விடிய நடந்த வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையர் தகவல்
Updated on
1 min read

ஆந்திராவில் 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மதியம் கத்திரி வெயில் கொளுத்தியதால் சற்று மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் உற்சாகமாக வாக்காளர்கள் வாக்கு சாவடிகளுக்கு வரத்தொடங்கி விட்டனர்.

இதனால் காலையை விட மாலையில் சில இடங்களில் அதிகமான மக்கள் வாக்களித்தனர். சித்தூர், குப்பம், விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு வாக்கு சாவடிகளில் மக்கள் இரவு நேரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு அளித்தனர்.

இதனால், வாக்குச் சாவடிகளில் விளக்கு, குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது. விசாகப்பட்டினத்தில் காஜுவாகா எனும் பகுதியில் மழை பெய்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போதிலும் மக்கள் மெழுகுவர்த்தியின் உதவியுடன் வாக்களித்தனர். பல இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இது குறித்து ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் முகேஷ் குமார் மீனா கூறுகையில், “இம்முறை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. சில இடங்களில் அதிகாலை 2 மணி வரை கூட வாக்குப்பதிவு நடந்தது.

இம்முறை ஆந்திராவில் வாக்குப் பதிவு 81 சதவீதத்தையும் தாண்டுமென கருதப்படுகிறது. ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் போட்டியிட்ட பிட்டாபுரம் தொகுதியில் 86.87 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in