

இமாச்சல பிரதேசத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. மண்டி மக்களவைத் தொகுதி மட்டும் காங்கிரஸ் வசம் உள்ளது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டு உள்ளார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனான இவர், கங்கனாவுக்கு பெரும் சவாலாக உள்ளார். இவரது தாய் பிரதிபா சிங் தற்போது மண்டி எம்பியாக உள்ளார்.
வரும் ஜூன் 1-ம் தேதி மண்டி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த சூழலில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் நேற்று மண்டியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிண்டால், முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர், கங்கனா ரனாவத்தின் தாய் ஆஷா, சகோதரி ரங்கோலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு கங்கனா ரனாவத் நிருபர்களிடம் கூறும்போது, "பகவான் ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று காங்கிரஸ் கூறியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அந்த கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் பதவியேற்ற பிறகுராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
தற்போது அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி சாதாரண மனிதர் கிடையாது. அவர் இந்தியாவின் வரலாற்றை தீர்மானிக்கும் பிதாமகன் ஆவார். அவர் ராமரின் அம்சம் ஆவார்" என்றார்.