Published : 15 May 2024 04:54 AM
Last Updated : 15 May 2024 04:54 AM

பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

பாட்னா: புற்றுநோயால் காலமான பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

பாஜக மூத்த தலைவரும் பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி (72), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று பாட்னா கொண்டுவரப்பட்டு, கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து மாலையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

சுஷில் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மக்களவைத் தேர்தல் பணிகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

சுஷில் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “பிஹாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் சுஷில்மோடி முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவசர நிலையை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில்தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அவர் மிகவும் கடின உழைப்பாளி, அன்புக்குரிய எம்எல்ஏ, அரசியல் தொடர்பான விஷயங்களில் ஆழமான புரிதல் கொண்டவர். ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவு கூரப்படும்” என்று கூறியுள்ளார்.

11 ஆண்டுகள்.. 2005 நவம்பர் முதல் 2013 ஜூன்வரையிலும் பிறகு 2017 ஜூலைமுதல் 2020 டிசம்பர் வரையிலும்என இரண்டு காலகட்டங்களில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பிஹார்துணை முதல்வராக சுஷில் மோடிபதவி வகித்துள்ளார். அவரது முப்பதாண்டு கால பணியில் எம்எல்ஏ,எம்எல்சி, மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார்.

1974 ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் இருந்து, லாலு, நிதிஷ் குமார் போன்றவர்களுடன் சுஷில் மோடி தோன்றினார். பிஹார் பாஜகவின் நிறுவனர் கைலாசபதி மிஸ்ராவுக்கு பிறகு மிகவும் செல்வாக்கு மிக்க பாஜக தலைவராக அறியப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x