Published : 19 Aug 2014 06:08 PM
Last Updated : 19 Aug 2014 06:08 PM

புற்றுநோயை விட கொடியதான ஊழலை நாட்டை விட்டே விரட்டுவோம்: பிரதமர் மோடி

ஹரியாணா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புற்றுநோயைக் காட்டிலும் கொடியதான ஊழலை கட்டுப்படுத்த தவறினால், ஊழலுக்கு நாடே அழிந்து விடும். ஆகையால் ஊழலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம் என்றார்.

ஹரியாணா மாநிலம் கைத்தாலில் இருந்து ராஜஸ்தான் எல்லை வரை அமைக்கப்படவுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், " நமது உடலில் உள்ள ரத்த நாளங்களைப் போல தான், நம் நாட்டில் உள்ள சாலைகளும். நமது நாட்டின் பல்வேறு பகுதிகளை ரத்த நாளங்களை போல இருக்கும் சாலைகள் இணைக்கின்றன.

ஹரியாணாவில் உள்ள கைதாலில் தேர்தல் பிரசார கூட்டத்தில் நான் பேசினேன். தற்போது தயானந்த சரஸ்வதி பிறந்த மண்ணில் இருந்து பிரதமராக வந்து பேசிக்கொண்டிருக்கிறேன். தயானந்த சரஸ்வதி இங்கு பெரும் மதிப்பிற்குரியவராக கருதப்படுகிறார்.

குஜராத் மக்களை நான் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளேனோ, அதே அளவு ஹரியாணா மக்களையும் தெரிந்து வைத்துள்ளேன். ஹரியாணா மக்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என்பதை நான் அறிவேன். இது இம்மண்ணுக்கு உள்ள தனிச்சிறப்பு.

ஹரியாணா மாநில மக்கள், என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கண்டிப்பாக இந்த மக்களின் அன்பிற்கு, வட்டியாக அவர்களுக்கு வளர்ச்சியை அளிப்பேன்.

புற்றுநோயை விட மோசமான நோய் ஊழல். ஊழலைக் கட்டுப்படுத்த தவறினால், அவை நாட்டையே அழித்துவிடும். ஆகையால், ஊழலை நாட்டிலிருந்து விரட்டியடிக்க நாம் பாடுபடுவோம். நாட்டு மக்களின் பிரதான சேவகனாக பொறுப்பேற்றுள்ள நான், ஹரியாணா மாநிலத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துவேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x