மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றம் இழைத்துள்ளதாக அமலாக்கத் துறை தகவல் @ ஐகோர்ட்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றச்சாட்டு இருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத் துறை தனது எதிர்ப்பினை இன்று பதிவு செய்தது. வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா முன்பு ஆஜரான அமலாக்கத் துறை வழக்கறிஞர், "இந்த வழக்கில் அடுத்து தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி இணை குற்றவாளியாக சேர்க்கப்பட இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையைத் தாமதப்படுத்துவதில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியும் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், "அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் பணமோசடி மற்றும் ஊழல் வழக்கில் இன்னும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. விசாரணையை முன்கூட்டியே முடிப்பது குறித்த கேள்வியே இல்லை" என்று தெரிவித்தார்.

பின்னணி என்ன? - கடந்த 2021-22 ஆண்டில் டெல்லியில் புதிதாக மதுபான கொள்கை உருவாக்கி அமல்படுத்தப்பட்டபோது, அதில் முறைகேடும் பண மோசடியும் நடந்திருப்பதாக மத்திய புலனாய்வு நிறுவனங்கள் குற்றம்சாட்டியிருந்தன. டெல்லியில் புதிய மதுபான கொள்ளை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள், ‘சவுத் க்ரூப்’ வழங்கிய ரூ.100 கோடி லஞ்சப் பணத்தில் ரூ.45 கோடி கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியது. மேலும், அரவிந்த் கேஜ்ரிவால் இந்த ஊழலின்‘கிங்பின்’ என்றும் கூறியது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை இதுவரை ஏழு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. கடைசியாக ஏப்ரல் 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பிஆர்எஸ்-ன் கவிதா மற்றும் நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிஆர்எஸ் மேலவை உறுப்பினர் கவிதா உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி முதல்வருக்கு மக்களவைத் தேர்தல் காரணமாக ஜூன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் உரிமை வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன, உரிமைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது, தகுந்த அதிகாரிகளின் அனுமதியின்றி உரிமம் நீட்டிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் மணீஷ் சிசோடியா மீது சுமத்தப்பட்டுள்ளன.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ, மணீஷ் சிசோடியாவை 2023, பிப்.26-ம் தேதி கைது செய்தது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை இதே வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரை 2023, மார்ச் 9-ம் தேதி கைது செய்தது. இந்த நிலையில் 2023, பிப்/28-ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in