Published : 14 May 2024 02:54 PM
Last Updated : 14 May 2024 02:54 PM

“மோடியின் பொய்களை பகிரங்கமாக அம்பலப்படுத்திய தேர்தல் இது!” - கார்கே காட்டமான பேச்சு

மல்லிகார்ஜுன கார்கே

ஜாம்ஷெட்பூர்: பிரதமர் மோடியை ‘பொய்யர்களின் தலைவர்’ என்று வருணித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தத் தேர்தல் நரேந்திர மோடியின் பொய்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மக்களவைத் தொகுதியின் லதேஹர் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதியை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது: “இந்தத் தேர்தல் நரேந்திர மோடியின் பொய்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளன. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவரை நான் பெய்யர்களின் தலைவர் என்று அழைத்து வருகிறேன்.

விரத்தியின் வெளிப்பாடாக அவரிடம் இருந்து வரும் இந்தப் பேச்சுகளின் மூலம் அவரின் அனைத்துப் பொய்களும் மக்களிடம் முழுமையாக வெளிப்பட்டுவிட்டன. அதனால் இந்த முறை பாஜகவுக்கு பாடம் கற்றுத்தர மக்கள் முடிவு செய்துவிட்டனர். நான்காவது கட்ட வாக்குப்பதிவிலும் இண்டியா கூட்டணிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. மோடியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலிகளைப் பறித்துக் கொள்ளும், வளங்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடும் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு பிரதமரால் பொய் சொல்ல முடியும் என்று ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. கடந்த ஐந்து தசாப்தங்களாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் அப்படி யோசித்திருக்குமா?

இந்தத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கான போர். ஒருபுறம், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை இன்னும் ஏழைகளாகவும் மாற்ற விரும்பும், ஆர்எஸ்எஸ்-ஸின் ஆயுதமாக இருக்கும் சர்வாதிகாரி. ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி அமைப்போம் என்று அவர்களின் (பாஜக) எம்பி, எல்எல்ஏகளும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். பிரதமர் மோடி அதற்கு எதிரானவர் என்றால், அவ்வாறு பேசிய சொந்தக் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?

இது உங்களுக்கான நேரம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள, அரசியல் சாசனத்தை பாதுகாக்க விரும்புகிறவர்களா? அல்லது, அதனை மாற்ற விரும்பும், சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்களா? யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நேரம் இது” என்று கார்கே பேசினார்.

சத்ரா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் காளிசரணை எதிர்த்து திரிபாதி போட்டியிடுகிறார். இங்கு ஐந்தாவது கட்ட தேர்தல் நாளான மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x