Published : 27 Apr 2018 08:07 PM
Last Updated : 27 Apr 2018 08:07 PM

விபத்தில் சிக்கவிருந்த விமானம்: ராகுலிடம் போனில் பேசிய பிரதமர் மோடி

 

கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தீவிரமான பிரச்சாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஹூப்ளி நகருக்கு சென்றார். அப்போது, திடீரென ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

விமானம் ஒருபுறம் சாய்வாகவும், கீழ்நோக்கி வேகமாகவும் இறங்கியது. ஆனால், ஒருவழியாக விமானி, விமானத்தை விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.

இதையடுத்து ராகுல்காந்தி சார்பில் மாநில போலீஸ் டிஜிபியிடம் அவரின் உதவியாளர் கவுஷல் வித்யார்த்தி புகார் அளித்தார். அதில் வியாழக்கிழமை காலை 10.45 மணிஅளவில் விடி-ஏவிஎச் பால்கான் 2000 விமானத்தில் டெல்லியில் இருந்து ஹுப்ளிநகருக்கு வந்து கொண்டிருந்தோம். அப்போது, தரையிறங்கும் நிலையில், 500 மீட்டர் உயரத்தில் விமானம் திடீரென ‘டைவ்’ அடித்தது, பின்னர் தரையை நோக்கி வேகமாக கீழே இறங்கி, குலுங்கியது. விமானத்தின் இந்த திடீர் கோளாறுக்கு காரணம் தெரியவில்லை. காலநிலையும் இயல்பாகவே இருந்தது. அதிகமான வெயிலும், பனியும், காற்றும் இல்லை.

விமானி விமானத்தை 3-வது முயற்சியில் பத்திரமாக ஹுப்ளி விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இந்த செயல்பாடுகள் எங்களுக்கு சந்தேகத்தையும், மோசமாக விமானம் ஓட்டியதையும் காட்டுகிறது. விமானத்தில் ஏதேனும் கோளாறு செய்யப்பட்டு, அதன்மூலம் ஏதேனும் விபத்து விளைவிக்க திட்டம் தீட்டப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது அது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

ராகுல் காந்திக்கு உயர்மட்ட அளவிலான கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால், இந்த விஷயம் குறித்து விமானப் போக்குவரத்து துறை அமைச்சகமும் விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையே பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு ராகுல் காந்தியின் விமானம் விபத்துக்குள்ளாக இருந்த விஷயம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த ராகுல் காந்தியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தார். அவருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா, உடல்நலன் குறித்தும் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடுவதாக பிரதமர் மோடி ராகுலிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x