“ஸ்டாலினால் பிரதமராக முடியுமா?” - அமித் ஷா கடும் தாக்கு

“ஸ்டாலினால் பிரதமராக முடியுமா?” - அமித் ஷா கடும் தாக்கு
Updated on
1 min read

மும்பை: இண்டியா கூட்டணியில் யார் பிரதமர்? ஸ்டாலினால் அல்லது ராகுல் காந்தியால் பிரதமராக முடியுமா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நடந்த பாஜக பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட அமித் ஷா பேசியதாவது: "என் வாழ்நாளில் இவ்வளவு பக்தி பரவசத்தை நான் கண்டதில்லை. ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் ஒட்டுமொத்த தேசமும் பக்தியில் மூழ்கி இருந்தது.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே மற்றும் சுப்ரியா சுலே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்களோ தங்களின் வாக்கு வங்கியை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை.

அழைப்பு விடுக்கப்பட்டும் உத்தவ் தாக்கரே கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? அந்த வாக்கு வங்கிக்கு நாங்கள் பயப்படவில்லை. அதனால்தான் பிரதமர் மோடி, முன்பு அவுரங்கசீப்பால் இடித்துத் தள்ளப்பட்ட காசி விஸ்வநாத் வளாகத்தை கட்டி முடித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சுத்தப்படுத்துவோம் என்று பேசியுள்ளார். அவரது மூளை குழம்பிவிட்டதா என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். பகவான் ராமர் இருக்கும் இடம் தூய்மையற்றதாக இருக்க முடியுமா? அவர்களுக்கு நமது பாரம்பரியம் தெரியாது, மதம் புரியாது. அவர்கள் தங்கள் சுயநல தேவைகளை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள்.

இண்டியா கூட்டணியின் தலைவர் யார் என்று நான் அவர்களிடம் கேட்கிறேன். அவர்களில் யார் பிரதமர்? உத்தவ் தாக்கரே பிரதமராக முடியுமா? சரத் பவார் பிரதமராக முடியுமா? ஸ்டாலின் பிரதமராக முடியுமா? மம்தாவால் ஆக முடியுமா? அல்லது ராகுல் காந்தி ஆக முடியுமா?

பிரதமர் யார் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு, இண்டியா கூட்டணி தலைவர் ஒருவர், கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் மாறி மாறி பிரதமராக வருவார்கள் என்று கூறுகிறார். பிரதமர் என்பவர் உலகெங்கிலும் நமது தேசத்தை பிரதிநிதித்துவப் படுத்தவேண்டும். மாறி மாறி அரசாங்கத்தை நடத்தினால், ஒருவேளை தொற்று பரவல் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

தீவிரவாதி கசாப்பை காங்கிரஸ் தலைவர்கள் ஆதரிக்கின்றனர். உத்தவ் தாக்கரேவும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா? மகாராஷ்டிர மக்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். முஸ்லிம் தனிநபர் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் துடிக்கும் காங்கிரஸுடன் கைகோத்துள்ளாரா என்பது குறித்து உத்தவ் பதிலளிக்க வேண்டும்” இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in