4-ம் கட்ட தேர்தலில் 5 மணி வரை 62.31% வாக்குப்பதிவு: மே.வ, ஆந்திராவில் சில இடங்களில் வன்முறை

4-ம் கட்ட தேர்தலில் 5 மணி வரை 62.31% வாக்குப்பதிவு: மே.வ, ஆந்திராவில் சில இடங்களில் வன்முறை
Updated on
2 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றுவரும் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படி 62.31% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் (மாலை 5 மணி வரை):

  • ஆந்திரப் பிரதேசம்: 68.04%
  • பிஹார்: 54.14%
  • ஜம்மு காஷ்மீர்: 35.75%
  • ஜார்க்கண்ட்: 63.14%
  • மத்தியப் பிரதேசம்: 68.01%
  • மகாராஷ்டிரா: 52.49%
  • ஒடிசா: 62.96%
  • தெலங்கானா: 61.16%
  • உத்தரப் பிரதேசம்: 56.35%
  • மேற்கு வங்கம்: 75.66%

இவை தவிர ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆந்திரா, மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள்: வாக்குப்பதிவு பரவலாக அமைதியாக நடைபெற்றாலும் கூட மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  • மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் போல்பூர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதற்றம் நிலவியது.
  • பிர்பும் பகுதியில் பாஜக - திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த இந்த மோதலால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.
  • அனந்தபூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் தாடிபத்ரி நகரில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

எம்எல்ஏ கைகலப்பு: ஆந்திராவில் தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிவக்குமார் வரிசையில் நிற்காமல் நேராக வாக்களிக்கச் சென்றதாகவும், இதனை எதிர்த்த அங்கிருந்த வாக்காளர் ஒருவர் வரிசையில் காத்திருக்காமல் வாக்களிக்கச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ சிவக்குமார் அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். மறுநொடியே பதிலடியாக வாக்காளரும் தன்னை தாக்கிய எம்எல்ஏவை தாக்கினார். இதனால் எம்எல்ஏ உடன் இருந்த அவரது ஆதரவாளர்களும் அந்த வாக்காளரை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முழுமையாக வாசிக்க>> காத்திருந்து வாக்களிக்க சொன்னவரை கன்னத்தில் அறைந்த ஆந்திர எம்எல்ஏ!

பாஜக வேட்பாளார் மாதவி லதா மீது வழக்கு: பாஜக ஹைதராபாத் வேட்பாளர் மாதவி லதா புர்கா அணிந்து வரிசையில் நின்றிருந்த பெண்களின் முகத்திரையை நீக்கி அடையாளம் பார்த்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹைதராபாத் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, “மார்க்கெட் காவல் நிலையத்தில் மாதவி லதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 171C, 186, 505(1)(c) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 132 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். முன்னதாக தனது செயலை நியாயப்படுத்தி பேசியிருந்த மாதவி லதா, “நான் இத்தொகுதியின் வேட்பாளர். எனக்கு வாக்காளர்களின் அடையாளத்தை சரி பார்க்கும் அதிகாரம் உள்ளது. இதை சிலர் வேண்டுமென்றே பிரச்சினையாக்குகின்றனர்” எனக் கூறியிருந்தார்.

சிறு சிறு சம்பவங்களைத் தவிர பரவலாக 4-ஆம் கட்ட தேர்தல் அமைதியாகவே நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் மொத்தம் 543-ல் 379 மக்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in