

ஜெயலலிதாவுடன் இணைந்து சுதாகரனும் இளவரசியும் கூட்டுச்சதி யில் ஈடுபடவில்லை என அவர் களுடைய வழக்கறிஞர் அமித் தேசாய் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது இவ்வழக்கில் 3, 4-ம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மும்பையைச் சேர்ந்த வழக்கறி ஞர் அமித் தேசாய் ஆஜரானார். அவர் வாதிடும்போது கூறியதாவது:
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி சுதாகரன், இளவரசி பெயரில் சொத்து குவித்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித் துள்ளனர்.
மேலும் சுதாகரனும் இளவரசியும் ஜெயலலிதாவுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு, சொத்து குவித்த தாகவும் கூறியுள்ளனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இது தொடர் பாக அவர்கள் தரப்பில் எவ்வித ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
எனவே இவ்வழக்கில் கூட்டுச்சதி திட்டத்தின் கீழ் சுதகாரணையும் இளவரசியையும் சட்டத்தால் தண்டிக்க முடியாது என பல வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, “வழக்கறிஞர் அமித் தேசாய் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து வாதிட வேண்டும்” என உத்தரவிட்டார்.
ஜெ.தரப்பில் புதிய மனு
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பாக புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், 1997-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப் பத்திரிக்கையை தமிழில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டபோது குற்றப் பத்திரிக்கை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது சில தவறுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, எங்கள் சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜன் மூலமாக குற்றப் பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறோம். இதை கருத்தில்கொண்டு திருத்தம் செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இம்மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு உத்தரவிட்டார்.