ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைவது 100% உறுதி: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

விஜயவாடாவில் ஒரு வாக்குச்சாவடியில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் | படம்: கே.வி.எஸ்.கிரி
விஜயவாடாவில் ஒரு வாக்குச்சாவடியில் திரண்டுள்ள மக்கள் கூட்டம் | படம்: கே.வி.எஸ்.கிரி
Updated on
1 min read

ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கூடவே ஆந்திர மாநிலத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒடிசாவின் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிஆந்திர மாநிலம் குண்டூரில் சந்திரபாபு நாயுடு தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “வாக்களிப்பது நம் கடமை. வாக்களிப்பதன் மூலம் நாம் வளமான எதிர்காலத்துக்கு உரிமை கோரலாம். நான் இதுவரையான தேர்தல்களில் இத்தகைய கூட்டத்தைப் பார்த்ததில்லை. இது மக்கள் ஜனநாயகத்தையும், தங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. மக்கள் தங்கள் சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களிக்கின்றனர். சென்னை, பெங்களூரு என பல ஊர்களில் வேலை நிமித்தமாக இருந்தாலும் வாக்களிக்க வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி.” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in