9 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல்

9 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதன்படி 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. நான்காம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன்படி ஆந்திராவில் மொத்தமுள்ள 25, தெலங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.

விஐபி வேட்பாளர்கள்: நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் பல்வேறு விஐபி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுப்ரதா பதக் களத்தில் உள்ளார்.

மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ராவும் பாஜக சார்பில் அம்ரிதா ராயும் போட்டியிடுகின்றனர்.

மேற்குவங்கத்தின் பகரம்பூரில் ஆளும் திரிணமூல் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசூப் பதான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக சார்பில் நிர்மல் சந்திர சகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

பிஹாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அவதேஷ் ராய் போட்டியிடுகிறார்.

தெலங்கானாவின் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைஸி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை மாதவி லதா களமிறங்கி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in