“எனது மகள் ஷர்மிளாவை ஆதரியுங்கள்” - ஜெகன்மோகன் ரெட்டி தாயார் வேண்டுகோள்

“எனது மகள் ஷர்மிளாவை ஆதரியுங்கள்” - ஜெகன்மோகன் ரெட்டி தாயார் வேண்டுகோள்
Updated on
1 min read

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது தாயார் விஜயலட்சுமி மற்றும் தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே சில ஆண்டுகளாக மனக்கசப்பு உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டிலிருந்து வெளியேறி ஹைதராபாத்தில் குடியேறினர்.

பின்னர், அங்கு ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலங்கானா எனும் கட்சியை தொடங்கினார். சமீபத்தில் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர் அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மேடையிலும் ஷர்மிளா, தனது சகோதரர் ஜெகன்மோகனின் தவறுகளை சுட்டி காட்ட தொடங்கினார்.

மேலும், முதல்வர் ஜெகனின் தாயார் விஜயலட்சுமியும் தனது மகளின் பக்கமே நிற்கிறார். நேற்று மாலை 6 மணியுடன் ஆந்திர மாநில தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அதில் விஜயலட்சுமி கூறும்போது, “கடப்பா மக்களவை தொகுதியில் போட்டியிடும் உங்கள் ஒய்.எஸ்.ராஜசேகர சேகர ரெட்டியின் மகள் ஷர்மிளாவை மாபெரும் வெற்றியடைய செய்யுங்கள்" என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது ஜெகனுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏனெனில் அவர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கடப்பா மக்களவை தொகுதி வேட்பாளர் அவினாஷ் ரெட்டியை எதிர்த்தே போட்டியிடுகிறார். அவினாஷ் ரெட்டி, ஷர்மிளாவின் சித்தப்பாவின் மகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in