Published : 11 May 2024 09:20 AM
Last Updated : 11 May 2024 09:20 AM

காங்கிரஸின் பலவீனமே பாஜகவின் பலம்

நடைபெறும் நாடு தழுவிய மக்களவை பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலவீனமே, பாஜகவின் பலமாக உள்ளது. இக்காரணத்தினாலேயே கடந்த 2 முறையும் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் வியூகம், அக்கட்சியையும், கூட்டணி கட்சிகளையும் வெற்றி பாதையில் அழைத்து செல்கிறது. பாஜகவின் இந்த வியூகத்தை எட்டி பிடிக்க காங்கிரஸால் முடியவில்லை என்றே கூறலாம்.

பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக தேர்தல் மோதல் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, கோவா, உத்தராகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது.

மேற்கண்ட 10 மாநிலங்களில் மொத்தம் 133 மக்களவை தொகுதிகளில் பாஜக கடந்த 2019-ல் 128 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது 96.24 சதவீதமாகும். வட இந்தியாவில் முக்கிய மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் பிஹாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுகின்றன. ஆனால், என்.டி.ஏ கூட்டணியில் பாஜக தலைமை தாங்கி வழி நடத்துகிறது.

ஆனால், இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் தலைமை சொல்லி கொள்ளும் படி இல்லை. 120 மக்களவை தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தம் 103 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில் பாஜக மட்டுமே 79 தொகுதிகளில் வெற்றி கொடி நாட்டியது. மேற்கண்ட இரு மாநிலங்களில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 85.83 சதவீதம் தொகுதிகளை கைப்பற்றினால், மீதமுள்ள காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வெறும் 14.16 சதவீதம் தொகுதிகளையே கைப்பற்றின.

நாட்டில் உள்ள மேற்கண்ட 12 மாநிலங்களில் 46.59 சதவீதம் மக்களவை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில், 91.30 சதவீதம் தொகுதிகளை பாஜக கைவசம் வைத்துக் கொண்டு எதிரிகள் கொஞ்சம் கூட நெருங்க முடியாத தூரத்தில் உள்ளது.

4 முனை போட்டி: உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. ஆனால் இம்முறை சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து களம் இறங்கி உள்ளது. இது மட்டுமே காங்கிரஸுக்கு ஆறுதல் தரும் விஷயமாகும். ஆனால், அதே சமயம், மேலும் சில மாநில கட்சிகள், சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியை விட்டு விலகி, அவை தற்போது பாஜக வுடன் கூட்டணி அமைத்துள்ளன.

மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், வடக்கே அக்கட்சி பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். இந்த சூத்திரத்தை பாஜக நன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருவதாக கடந்த 2 மக்களவை தேர்தலில்களின் முடிவே நமக்கு உணர்த்துகிறது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 52 தொகுதிகளில் பஞ்சாப்பில் வந்த 8 தொகுதிகளும் அடக்கம். கேரளா, தமிழ்நாட்டுக்கு அடுத்து காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், தற்போதைய நிலைமை எல்லாம் தலை கீழாக மாறி விட்டது என்றே கூறலாம். ஏனெனில், காங்கிரஸுக்கு தலைமை வகித்த கேப்டன் அமரீந்தர் சிங் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

பஞ்சாபில் தற்போது பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி - சிரோன்மணி அகாலி தளம் இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெற வில்லை. கடந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 59 சதவீதம் வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் 31 சதவீதம் மட்டுமே பெற்றது.

ராகுல்காந்தியின் ஜோடோ பாதாயாத்திரை, நியாய யாத்திரை போன்றவை வடக்கே அதிக அளவில் காங்கிரஸுக்கு கை கொடுக்க வில்லை என்றே கூறலாம். உத்தர பிரதேசத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி அங்கு பாஜகவை போல் வெற்றிகரமாக இயங்க வில்லை என்றே கூறலாம்.

2019 மக்களவை தேர்தலில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. கேரளாவை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இரட்டை இலக்கை கூட காங்கிரஸ் எட்டவில்லை. புதுச்சேரியை தவிர்த்து மற்ற எந்த மாநிலங்களிலும் 50 சதவீத வாக்கை காங்கிரஸ் பெற வில்லை.

அசைக்க முடியாத தேசிய கட்சி: பாஜக 8 மாநிலங்கள் உட்பட யூனியன் பிரதேச மாநிலங்களில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும், இதர மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செல்வாக்கு மிக்க கட்சியாகவே தொடர்கிறது. 3 மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேலாகவும், 10 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேலாக பாஜக வாக்குகளை பெற்று தொடர்ந்து அசைக்க முடியாத தேசிய கட்சியாக விளங்கி வருகிறது. அ

திக மக்களவை, மாநிலங்களின் வரிசையில் 90 சதவீதத்துக்கு மேல் பாஜகவே வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளுக்கு எட்டாத தூரத்தில் பாஜக உள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் சிறிதளவு ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

இந்த 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே தற்போது ஆட்சியிலும் உள்ளதால், மக்களவை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பும் இந்த இரு மாநிலங்களில் காங்கிரஸுக்கு சாதகமாகவே உள்ளது. இதே போன்று மகாராஷ்டிராவிலும் உத்தவ் தாக்கரே இணைந்ததால், காங்கிரஸுக்கு ஒரு பிளஸ்பாயிண்ட் என்றே கூறலாம். மேற்கண்ட 3 மாநிலங்களை விட்டால், மீதமுள்ள மாநிலங்களில் காங்கிரஸ் அலை வீசும் அளவுக்கு ஏதும் இல்லை.

டெல்லி, மற்றும் ஜார்க்கண்டில் தோழமை கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் ஜே எம் எம் கட்சிகள்தான் காங்கிரஸை நம்பி உள்ளது. ஆனால், இந்த இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களான அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளதால், இது காங்கிரஸுக்கு அவப்பெயர் உண்டாக்குமோ எனும் பீதியையும் கிளப்பி உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஒடிசாவில் நவீன் பட்நாயக், உத்தரபிரதேசத்தில் அகிலோஷ் யாதவ், பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கும் திமுக ஆகிய மாநில கட்சிகள் பாஜகவிற்கு பலத்த எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றன. ஆக மொத்தத்தில் கடந்த 2 மக்களவை தேர்தல்களை போலவே இம்முறையும், காங்கிரஸ் கட்சியின் பலவீனமே பாஜகவின் பலம் என்று சொல்லலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x