

புதுடெல்லி: ‘‘அணு ஆயுதம் வைத்திருப்பதால் பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறிய பழைய வீடியோவை வெளியிட்டு, பாஜக மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளதால், அந்நாட்டை இந்தியா மதிக்க வேண்டும். அவர்களை நாம் மதிக்காவிட்டால், இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டு வீசுவது பற்றிஅவர்கள் சிந்திப்பர். அதனால் பாகிஸ்தானிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு பதில், நாம் ராணுவ பலத்தை காட்டுகிறோம். இது பதற்றத்தைதான் அதிகரிக்கிறது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஒரு பைத்தியக்காரர், இந்தியா மீது குண்டு வீச முடிவு செய்தால், என்ன நடக்கும்?
நம்மிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. லாகூரில் அணு குண்டு வீச முடிவு செய்தால், அதன் கதிர்வீச்சு பாதிப்பு 8 நொடியில் அமிர்தசரஸ் வரை வந்துவிடும்.
இவ்வாறு வீடியோவில் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். இது தற்போது தேர்தல் நேரத்தில் வைராலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘‘ ராகுலின் காங்கிரஸ் கொள்கை இந்த தேர்தலில் தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானை ஆதரிப்பது, மக்களை பிரிப்பது, பொய் மற்றும் அவதூறு கூறுவது, ஏழைகளை திசை திருப்ப பொய் உத்திரவாதங்கள் அளிப்பது போன்றவைதான் காங்கிரஸின் கொள்கைகள்’’ என கூறியுள்ளார்.