Published : 11 May 2024 05:08 AM
Last Updated : 11 May 2024 05:08 AM

குஜராத் நீட் தேர்வில் முறைகேடு - ரூ.10 லட்சம் பேரம் பேசிய பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர். இந்த தேர்வின்போது ராஜஸ்தான், பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஆள் மாறாட்டம் மூலம் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குஜராத்தின் கோத்ராவில் தேர்வு மைய துணை கண்காணிப்பாளரே முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் துணை கண்காணிப்பாளராக அதே பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் துஷார் பட்பணியாற்றினார். அவரது தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்களுக்காக அவர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோத்ரா போலீஸார் கூறியதாவது: நீட் தேர்வின்போது மாவட்ட கூடுதல் ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் கோத்ராவின் ஜெய் ஜலராம் பள்ளியில் சோதனை செய்தனர். தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் துஷார் பட்டின் செல்போனில் வாட்ஸ் அப் செயலியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 16 மாணவர்களின் பெயர்கள், பதிவு எண்கள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் 6 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் பேரம் பேசியிருந்த ஆசிரியர் துஷார் பட் முன்பணமாக ரூ.7 லட்சத்தை பெற்றுள்ளார்.

நீட் வினாத்தாளில் மொத்தம் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் சரியான விடைக்கான வட்டத்தை மையிட்டு நிரப்ப வேண்டும்.

சம்பந்தப்பட்ட 6 மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த வினாக்க ளுக்கு மட்டும் பதில் அளித்தனர். இதர வினாக்களை நிரப்பாமல் விட்டுவிட்டனர். விடைத்தாளை அளித்த பிறகு, 6 மாணவர்கள் நிரப்பாமல் விட்டிருந்த வினாக் களுக்கு துஷார் பட் சரியான பதிலை தேர்வு செய்து நிரப்பி யுள்ளார். இதுதொடர்பாக கல்விஅதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் துஷார் பட், இடைத்தரகர்கள் பரசுராம் ராய், ஆரிப் வோரா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். துஷார் பட்டிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கோத்ரா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x