Published : 11 May 2024 05:22 AM
Last Updated : 11 May 2024 05:22 AM

இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 84 சதவீதத்தில் இருந்து 78 சதவீதமாக குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 84 சதவீதத்தில் இருந்து 78 சதவீதமாக குறைந்திருக்கிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.84 சதவீதத்தில் இருந்து 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (இஏசி-பிஎம்), மத்திய அரசின் சுதந்திரமான அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பு சமூக, பொருளாதார விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கடந்த 1950 முதல் 2015 வரையிலான காலத்தில் சிறுபான்மையினர் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கையை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அண்மையில் வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது: உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்திய துணை கண்டத்தில் வசிக்கின்றனர். கடந்த 1950-ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 84 சதவீதமாக இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 78 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 1950-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.84 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ம்ஆண்டில் 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1950-ம் ஆண்டில் 2.24 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல கடந்த 1950-ம் ஆண்டில் 1.24 சதவீதமாக இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 2015-ல் 1.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் 3.75 சதவீதமும், வங்கதேசத்தில் 18.5 சதவீதமும் முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான், இலங்கையில் பவுத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். பூடானில் 17.6 சதவீதம், இலங்கையில் 5.25 சதவீதம் அளவுக்கு பவுத்த மதத்தினர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமே பெரும்பான்மை இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

ஒரு சில நாடுகளில் மட்டுமே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல் நிலவுகிறது .அந்த நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்திருக்கிறது. சீனாவில் வசிக்கும் திபெத் புத்த மதத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதேபோல வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள், இந்தியாவில் அடைக்கலம் தேடி வருகின்றனர். இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகளும் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளனர். இது இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை பறைசாற்றுகிறது.

இவ்வாறு பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் 167 நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் குறித்தும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x