

தெலங்கானா மாநிலம், மேதம் மாவட்டம், நர்சாபூரில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள 90 சதவீத எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கள் அரசியலில் கோலோச்சுவது இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்தும் முன்னோர்கள் எழுதி வைத்த அரசியல் சாசனத்தினால் கிடைக்கிறது.
இதுபோன்ற ஒன்றை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ரத்து செய்வதாகத் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இதனால்தான் அரசியல் சார்ந்த சில துறைகளை தனியார் மயமாக்கவும் திட்டமிட்டனர். அதன் பின்னர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடலாம். இதுதான் பாஜகவின் திட்டம்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி பல விமான நிலையங்கள், துறைமுகங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்து விட்டார். மோடியிடம் இருந்து இவற்றை மீட்கவே இண்டியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மோடியிடம் உள்ள வெறும் 2 சதவீத பில்லியனர்களின் கையில் தான் நாட்டின் பொருளாதாரமே அடங்கி உள்ளது.
நாட்டில் உள்ள ஏழ்மையை ஒழிக்க இண்டியா கூட்டணி மிகப்பெரிய திட்டங்களை வகுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழைகள் குறித்த விவரம் சேகரிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண்ணை தேர்வு செய்து அவர்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் போடப்படும்.
இதன்படி மாதம் ரூ. 8500 ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். இதில், இவர்கள் தங்களின் குடும்பத்துக்குத் தேவையான கல்வி, மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.