Published : 09 May 2024 08:42 AM
Last Updated : 09 May 2024 08:42 AM

மருமகன் ஆகாஷ் ஆனந்த் எனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். ஆகாஷ் ஆனந்த் அரசியல்ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாயாவதி கூறியுள்ளார்.

மாயாவதியின் அண்ணன் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். லண்டனில் எம்பிஏ படித்தவர். கடந்த 2017-ல்உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலின்போதும் கட்சியின் முக்கிய முகமாக ஆகாஷ் அறியப்பட்டார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பரில் ஆகாஷை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.

இந்நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் ஒரு கட்சியாக மட்டுமின்றி பாபா சாகேப் அம்பேத்கரின் சுயமரியாதை மற்றும் சமூக மாற்றத்துக்கான இயக்கமாகவும் அறியப்படுகிறது.

இதற்காக கன்ஷிராமும் நானும் எங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளோம். ஒரு புதிய தலைமுறையும் அதற்கு வேகம் கொடுக்க தயாராகி வருகிறது.

இந்த நோக்கத்துக்காக ஆகாஷ்ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அரசியல் வாரிசாகவும்அறிவித்தேன். ஆனால் கட்சி மற்றும்இயக்கத்தின் நலன் கருதி, அவர் முழு முதிர்ச்சி அடையும் வரை இவ்விரு முக்கியப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

ஆகாஷின் தந்தை ஆனந்த் குமார், கட்சியிலும் இயக்கத்திலும் முன்புபோல் தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றுவார்” என்று கூறியுள்ளார்.

ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை மாயாவதி தெரிவிக்கவில்லை. எனினும் கடந்த மாத இறுதியில் சீதாபூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆகாஷ் ஆனந்த் ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து ஆகாஷ் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x