Published : 08 May 2024 03:17 PM
Last Updated : 08 May 2024 03:17 PM

“அம்பானி, அதானி குறித்து திடீர் மவுனம் ஏன்?” - ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி

பிரதமர் மோடி

கரிம்பூர் (தெலங்கானா): அம்பானி, அதானி குறித்த ராகுல் காந்தியின் திடீர் மவுனம் பற்றி புதிய தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்களிடம் இருந்து அவர் எவ்வளவு பணம் வாங்கியுள்ளார் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,“பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்?

நான் காங்கிரஸ் இளவரசரிடம் (ராகுல் காந்தி) ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “ஆர்ஆர் வரி குறித்து (RR Tax) டெல்லிக்கும் தெலங்கானாவுக்கு இடையில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ என்று ஒரு தெலுங்கு படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. அந்த ‘ஆர்ஆர்ஆர்’ வசூல் சாதனையை ‘ஆர்ஆர்’ வசூல் சாதனை மிஞ்சி விடும் என்று என்னிடம் சிலர் தெரிவித்தனர்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மொத்த வசூல் சாதனை சுமார் ரூ.1,000 கோடி என்று சொல்லப்பட்டது. ஆனால், சில நாட்களுக்குள்ளாகவே அதே அளவு பணம் ‘ஆர்ஆர்’ வரி மூலமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரு ‘ஆர்’ (ரேவந்த் ரெட்டி) தெலங்கானா மக்களிடமிருந்து கொள்ளையடித்து, அந்த வசூலினை டெல்லியில் உள்ள மற்றொரு ‘ஆர்’-க்கு (ராகுல் காந்தி) அனுப்புகிறது. இந்த ‘ஆர்ஆர்’ விளையாட்டு தெலங்கானாவை அழித்துவிட்டது.

பாஜக நாட்டின் நலனை முன்னிறுத்தி பாடுபடுகிறது. பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, காங்கிரஸ் கட்சிகள் குடும்ப நலனை முன்னிறுத்தி வேலை செய்கின்றன. இந்த (பரம்பரை) கட்சிகள் குடும்பத்தால், குடும்பத்துக்காக, குடும்பத்தினரால் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த இரண்டு கட்சிகளை ஒன்றிணைக்கும் பிணைப்பு ஊழலே. சமரச அரசியல் என்பது இந்த இரண்டு கட்சிகளின் மரபிலேயே உள்ளது. அதுவே அவர்களின் ஒரே கொள்ளை. காங்கிரஸும் பிஆர்எஸ் போன்ற ஊழல் கட்சிகளிடமிருந்து தெலங்கானாவை காப்பாற்ற வேண்டியது. அவசியம்.

பாபாசகேப் அம்பேத்கரின் எண்ணத்திலும் எழுத்திலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் மத ரீதியிலான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது. அந்த அரசியல் சாசனத்தால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை அவர்கள் (எதிர்க்கட்சிகள்) திருடி, அவர்களின் வாக்கு வங்கிளுக்கு வழங்க விரும்புகிறார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x