Published : 07 May 2024 09:40 AM
Last Updated : 07 May 2024 09:40 AM

ஊழலற்ற, வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அரசு அமைய வாக்களியுங்கள்: அமித் ஷா

காந்திநகர்: ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில் இரண்டாவது முறையாக களம் காண்கிறார்.

இந்நிலையில் இன்று காலை அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் தங்கள் கடமையை ஆற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். இது நீங்கள் தேசத்தைக் கட்டமைக்க செய்யும் கடமையாகும். மீண்டும் ஊழலற்ற, சாதிபேதம் அற்ற, வாரிசு அரசியல் இல்லாத ஆட்சி அமைய வாக்களியுங்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட, இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் கொண்ட ஆட்சியை தேர்ந்தெடுங்கள்.நீங்கள் செலுத்தும் வாக்கு உங்களுக்கான வளத்தைக் கொண்டு வருவதோடு தேசத்துக்கும் இனி வருங்காலங்களில் நன்மை சேர்க்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக காந்திநகரில் உள்ள ஒரு குடியிருப்புக்குச் சென்ற அமித் ஷா அங்கிருந்த மக்களிடம் பேசி, வாக்களிக்க ஊக்குவித்தார். மக்கள் அமித்ஷாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் பிரதமர் மோடி இன்று காலை அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாவது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனிடையே இரண்டாவது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ்வேட்பாளர் அசோக் பலாவி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் 3-வது கட்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 3-வது கட்டத்தில் ஒரு தொகுதி அதிகரித்து 95 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x