3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி

வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமரை உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார்.

பிரதமர் மோடி வெள்ளை நிற பைஜமா, காவி நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். வழியில் அவர் மக்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்திய வண்ணம் வந்தார். தன்னை ஓவியமாக வரைந்திருந்த ஒருவருக்கு அந்த ஓவியத்தின் கீழ் தனது கையொப்பத்தை இட்டுக் கொடுத்தார். அதேபோல் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்த சிறுமி ஒருவருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அவர் அளித்தப் பேட்டியில், “இன்று மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நமது கலாச்சாரத்தில் தானம் மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். வாக்கு தானம் செய்ய வேண்டும். நான் எப்போதுமே இங்கிருந்து தான் வாக்களிக்கிறேன். இத்தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்” என்று கூறினார்.

ஊடகவியலாளர்கள் மீது அக்கறை: பிரதமர் தனது பேட்டியின்போது, “இந்திய தேர்தல் நடைமுறைகளும், தேர்தல் நிர்வாகமும் உலக ஜனநாயக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய உதாரணங்களை உள்ளடக்கியவை. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் இவற்றைப் பற்றி நிச்சயமாக ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்த ஆண்டு உலகம் முழுவதும் 64 தேசங்களில் தேர்தல் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க வேட்னும். இந்த ஆண்டு ஜனநாயகத் திருவிழா நடைபெறும் ஆண்டு. இந்தியாவில் உள்ள 900+ டிவி சேனல்களும், 5000க்கும் அதிகமான நாளிதழ்களும் தேர்தல் திருவிழாவால் வண்ணமயமாக களைகட்டியுள்ளன.

தேர்தல் வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பணிச்சுமை அதிகம். அவர்கள் அங்குமிங்கும் அழைந்துதிரிய நேரிடும். ஆகையால் அனைத்து ஊடகவியலாளர்களும் தங்களின் உடல்நலனில் அக்கறை கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வெயிலில் செல்ல வேண்டியுள்ளதால் நிறைய தண்ணீர் அருந்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

95 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல்: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாவது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனிடையே இரண்டாவது கட்ட தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ்வேட்பாளர் அசோக் பலாவி உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கான தேர்தல் 3-வது கட்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 3-வது கட்டத்தில் ஒரு தொகுதி அதிகரித்து 95 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in