Last Updated : 07 Apr, 2018 09:14 PM

 

Published : 07 Apr 2018 09:14 PM
Last Updated : 07 Apr 2018 09:14 PM

அசாம் மதரஸாக்களில் அரபிக்கு பதிலாக அசாமிய மொழி போதிக்கவேண்டும்: பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

அசாம் மதரஸாக்களில் அரபிக்கு பதிலாக அசாமிய மொழியை போதிக்க வேண்டும் என அம்மாநில பாஜக அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இவரது கருத்தால் அசாமில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அசாமில் இன்றுடன் முடிந்த இரண்டு நாள் கல்விக் கருத்தரங்கில் பிஸ்வா சர்மா கூறும்போது, ''அரபு நாடுகளில் அசாமிய மொழி போதிக்கப்படுவதில்லை. எனவே, அசாமில் அரபு மொழியை போதிக்க வேண்டிய தேவை இல்லை. மதரஸாக்களில் அரபி பயிற்றுவதன் மூலம் அரசு தம்மிடம் பொதுமக்கள் கட்டிய வரிப்பணத்தை வீணாக்குகிறது'' எனத் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் புனித நூலான குரான் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனால், அதை நேரிடையாகப் படித்து புரிந்து கொள்ளவே முஸ்லிம்கள் விரும்புகின்றனர். குரானின் மொழிபெயர்ப்புகள் மற்ற மதத்தினருக்கே பயனாக உள்ளது. எனவே, மதரஸாக்களில் அரபு மொழி கற்பது அவசியமாகிறது. எனவே, பிஸ்வாஸ் சர்மா கூறிய கருத்திற்கு எதிராக அசாமில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து அசாம் மாநிலக் காங்கிரஸ் தலைவரான ரகிபுல் உசைன் கூறும்போது, ''இங்கிலாந்து நாட்டில் அசாம் மொழி போதிக்கப்படுவதில்லை. இருப்பினும், ஆங்கிலத்தை அசாமில் கற்றுக்கொடுக்கக் காரணம் என்ன?'' எனக் கேள்வி எழுப்பினார்.

அசாமின் முஸ்லிம் கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏவான அமீனுல் இஸ்லாம் கூறும்போது, ''மதரஸாக்களில் அரபு மொழியை இந்துக்களும் பல ஆண்டுகளாக கற்று வருகிறார்கள். நம் மாநிலத்தின் இளைஞர்கள் பல எண்ணிக்கையில் அரபு நாடுகளுக்கு வேலைதேடிச் செல்கின்றனர். அவர்களுக்கு அரபு மொழி தெரிந்தால் அங்கு பெரும் பயனாகவும் இருக்கும். எனவே, அமைச்சர் சர்மாவின் அரசியல் கருத்தை ஏற்க முடியாது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x