Last Updated : 21 Apr, 2018 08:24 AM

 

Published : 21 Apr 2018 08:24 AM
Last Updated : 21 Apr 2018 08:24 AM

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ‘இந்து - முஸ்லிம் இடையே நடக்கும் யுத்தம்’: பாஜக எம்எல்ஏ சஞ்சய் பாட்டீல் சர்ச்சை பேச்சு

கர்நாடக மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என கர்நாடக பாஜக எம்எல்ஏ சஞ்சய் பாட்டீல் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

கர்நாடகாவில் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பெலகாவி ஊரக தொகுதியின் பாஜக எம்எல்ஏ சஞ்சய் பாட்டீல், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

காங்கிரஸ் மக்களை சாதிவாரியாகவும், மதவாரியாகவும் பிரித்து அரசியல் செய்கிறது. தேர்தலுக்காக லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் நாம் ஏன் இன்னும் இந்துவாக கிளர்ந்து எழாமல் இருக்கிறோம். என் பெயர் சஞ்சய் பாட்டீல். நான் ஒரு இந்து. இது இந்து தேசம். இது ராமர் பிறந்த தேசம். இங்கு நாம் ராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீர வேண்டும்.

யாருக்கெல்லாம் பாபர் மசூதி வேண்டுமோ, திப்பு ஜெயந்தி கொண்டாட‌ வேண்டுமோ அவர்கள் எல்லோரும் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி வேண்டுமோ, ராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள்தான் தீர்மானிக்க போகின்றன. ராமர் கோயிலுக்கும் பாபர் மசூதிக்கும் இடையிலான பிரச்சினைகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. இது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம். இதில் நாம் வெல்ல வேண்டும்.

இவ்வாறு சஞ்சய் பாட்டீல் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஷ்வர் கூறுகையில், “பாஜக எம்எல்ஏ சஞ்சய் பாட்டீலின் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x