Published : 04 May 2024 04:08 PM
Last Updated : 04 May 2024 04:08 PM

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக விரைவில் ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ - எஸ்ஐடி சொல்வது என்ன?

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான போராட்டம்.

பெங்களூரு: ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிபிஐ, ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ விரைவில் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளுடன் முக்கியச் சந்திப்பு ஒன்றை நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரஜ்வல் ரேவண்ணாவை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வழக்கின் முக்கியக் குற்றவாளியான பிரஜ்வல் ரேவண்ணா காணாமல் போய்விட்டார். அவருக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமான தேடுதலும் நடந்து வருகின்றன என முதல்வரிடம் எஸ்ஐடி அதிகாரிகள் விளக்கினர்.

பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக தீவிரமான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தாமதம் மற்றும் அலட்சியத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் வலியுறுத்தினார்.

உரிய நடவடிக்கைகளுடன் நாங்கள் கைது நடவடிக்கையை மேற்கொள்வோம். இந்த விவகாரத்தில் சிபிஐ ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இது விசாரணையை விரைவுபடுத்தும். விமானநிலையங்களில் இருந்து தகவல் வந்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்து அழைத்து வருவோம் என்று சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூ கார்னர் நோட்டீஸ்: ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது குற்றம் தொடர்பான செயல்பாடுகள் குறித்த தகவல்களை, அதன் உறுப்பு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வகையில், சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு அமைப்பால் ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ‘ப்ளூ கார்னர் நோட்டீஸ்’ உத்தரவு பிறப்பிக்க கோரி, இந்தியாவின் இன்டர்போல் விவகாரங்களை கையாளும் சிபிஐக்கு சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிபிஐ இந்த நோட்டீஸ் உத்தரவைப் பிறப்பித்ததும், ரேவண்ணா எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கும் என எஸ்டிஐ நம்புவதாக இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

பின்னணி என்ன? - கர்நாடக மாநிலம் ஹாசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கினார். கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின. இந்நிலையில் 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் ஹாசன் போலீஸார், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்தனர். அவர‌து வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே கர்நாடக மகளிர் ஆணைய தலைவிக்கு 300 வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கிடைத்தது. அவரது வேண்டுகோளின்படி முதல்வர் சித்தராமையா, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இக்குழுவின் முன்பு ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு ரேவண்ணாவும், பிரஜ்வலும் கோரினர். இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக செய்தி வெளியானது. எனவே, போலீஸார் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹாசனை சேர்ந்த 44 வயதான முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்த மாணவிகள் 2 பேரை கல்லூரியில் சேர்க்க உதவுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இவ்வாறு மிரட்டி என்னை 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று தெரிவித்தார். இதையடுத்து ஹாசன் போலீஸார் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை உட்பட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளித்த 25 வயது பெண்ணை கடத்தியதாக‌ பிரஜ்வலின் தந்தையும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட போலீஸார் ரேவண்ணா மீதும், மஜத நிர்வாகி சதீஷ் பாவண்ணா மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், “ரேவண்ணாவும், ம‌ஜத நிர்வாகி சதீஷ் பாவண்ணாவும் என்னை செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டினர். பிரஜ்வல் மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சதீஷ் பாவண்ணா என்னை அவரது காரில் மைசூருவுக்கு கடத்திச் சென்றார்” என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x