Published : 04 May 2024 05:07 AM
Last Updated : 04 May 2024 05:07 AM

மேற்கு வங்க மாநில ஆளுநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகை பெண்ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஆளுநர் ஆனந்த் போஸ், மாநில அரசுடன் மோதல்போக்கை கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கம் வந்துள்ள பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதனிடையே, ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் ஆளுநர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். இதையடுத்து, அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்தார். ஆளுநர் மாளிகையில் நிரந்தர வேலை கொடுப்பதாகக் கூறி, பல சந்தர்ப்பங்களில் ஆளுநர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

திட்டவட்ட மறுப்பு: இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் இந்த பாலியல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து, குரல் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அன்பான ஊழியர்களே, அரசியல் அதிகாரத்தின் தூண்டுதலால் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை நீங்கள் தாராளமாக என்னை நோக்கித் தொடுக்கலாம். ஒருவருக்கு உச்சபட்ச தீங்கிழைக்க நினைத்தால், நடத்தை கெட்டவர் என்று பழிபோட்டு விடுவார்கள். ஆனால், இத்தகைய அபத்த நாடகங்கள் மூலம் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.

1943 வங்காளப் பஞ்சத்துக்கும், 1946 கொல்கத்தா கொலைகளுக்கும் நான்தான் காரணம் என்றுபழி சுமத்தினால்கூட ஆச்சரியப்பட மாட்டேன். அந்த லட்சணத்தில்தான் இங்கு மாநில அரசின் அத்துமீறிய அதிகாரம் வேலை செய்துகொண்டிருக்கிறது.

எனது வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். படுத்து ஓய்வெடுப்பதற்காக ஒன்றும் நான் மேற்கு வங்கம் வரவில்லை. சமதளப் பாதையில் நடைபோடவும் நான் மேற்கு வங்கம் வரவில்லை. கரடுமுரடான மலைப்பாதையில் ஏறவே வந்தேன். மக்களின் அன்புஎனக்கு உற்சாகமூட்டி வழிநடத்துகிறது.

இந்த சம்பவத்தால் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால், வங்கத்தில் நான் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று சில அரசியல் கட்சிகள் எனக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டன.

பல சூறாவளிகளைப் பார்த்தவன் நான். என்னைக் குறிவைக்கும் அரசியல் கட்சிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இது ஒன்றும் என்னை புரட்டிப்போடும் சூறாவளி அல்ல. வெறும் தேநீர் கோப்பைக்குள் சுழலும் புயல். உண்மையில் நான்தான் சூறாவளி என்பதை நீங்கள் உணரும் நாள் தொலைவில் இல்லை.

கைவசம் பதுக்கி வைத்திருக்கும் மற்ற நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டாக்களையும் வைத்து, என்னை குறிவைத்துத் தாக்குங்கள். நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும். உண்மையே வெல்லும். இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டையொட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி கொல்கத்தாவில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க ஆளுநர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இந்நிலையில் ஆளுநர் மீதான பாலியல் புகார் திரிணமூல் காங்கிரஸின் திட்டமிட்ட சதி என்று பாஜககுற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமன ஊழலால், முதல்வர் மம்தா பானர்ஜி பயந்து போயுள்ளார். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க முடியாமல் திரிணமூல் காங்கிரஸ் திணறி வந்தது. இந்நிலையில்தான் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது.

இது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி. இந்த விவகாரத்தில் உண்மை ஒருநாள் வெளிவரும். அப்போது இந்த சதிக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x