Last Updated : 04 May, 2024 07:46 AM

7  

Published : 04 May 2024 07:46 AM
Last Updated : 04 May 2024 07:46 AM

தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு…

கோப்புப்படம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 26-ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 88 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சில கட்டுப்பாடுகள் நகைப்புக்கு உரியதாக இருக்கின்றன. குறிப்பாக, தலைவர்கள் சிலைகளை சாக்கு பை அல்லது துணியால் மூடி வைப்பதை பலரும் விமர்சிக்கின்றனர்.

தலைவர்கள் சிலைக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? தேசத் தந்தை காந்தியடிகள், அம்பேத்கர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர் சிலைகளை மூடி வைப்பது அவமானத்துக்குரியது. தேர்தல் அரசியல் வேண்டாம் என்று பெரியார் கூறினார். ஆனால் அவரது சிலையைக் கூட மூடி வைக்கிறார்கள்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலத் திட்ட உதவிகள் பொறிக்கப்பட்ட பலகைகளும் மறைக்கப்படுகின்றன. சிலைகள், பெயர்ப் பலகைகளை மறைப்பதற்காக செலவிடப்படும் தொகை, மக்களின் வரிப்பணம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

மக்களின் வரிப் பணத்தை வீணாக செலவு செய்யலாமா? தேர்தலின்போது சுவரொட்டிகளுக்கும் பதாகைகளுக்கும் கூட தடை விதிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் யார் வேட்பாளர் என்பது தெரியாமல் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்று ஆயிரக்கணக்கானோர் புகார் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு முகாம்களை நடத்தி, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு செலுத்தும் அலகு, கட்டுப்பாடு அலகு, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய விவிபாட் ஆகிய அலகுகள் இருக்கும்.

இதில் வாக்காளர், வாக்கு செலுத்தும்போது வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகை சீட் விவிபாட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு ஏழு விநாடிகள் காட்டும். இதன் மூலம் வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பது உறுதி செய்து கொள்ளலாம். இதன் பிறகு சீலிடப்பட்ட பெட்டியில் ஒப்புகை சீட்டு விழுந்துவிடும்.

தற்போதுள்ள நடைமுறைப்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தலா ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவி பாட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இந்த சூழலில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அண்மையில் வழக்கை தள்ளுபடி செய்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தலாம் என்ற மனுதாரர்களின் யோசனையை நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர்.

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை தேவை என்ற கருத்தில்நான் முற்றிலுமாக முரண்படுகிறேன். முந்தைய காலங்களில்வாக்குச்சீட்டு முறை நடைமுறையில் இருந்தபோது வடமாநிலங்களில் வாக்குச்சாவடிகள் சூறை, வாக்குப் பெட்டிகள் எரிப்பு போன்ற சம்பவங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றன.

இதனால் பெரும் பிரச்சினைகள் எழுந்தன. அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு மூலம்தேர்தல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நியாயமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் உலகளவில் நமக்கு புகழ் ஓங்கும்.

மக்களவைத் தேர்தலில் நான் இரு முறை போட்டியிட்டேன். நான் வாக்காளர்களுக்கு பணம் வழங்கவில்லை. சாத்தியமில்லாத வாக்குறுதிகளையும் அள்ளித் தெளிக்கவில்லை. என்னால் முடிந்ததை செய்வேன் என்று கூறியே வாக்கு சேகரித்தேன். தேர்தலில் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றேன். நாடாளுமன்றத்தில் எனது குரல் எனது தொகுதிக்கு மட்டுமில்லாமல் எனது மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும் ஒலித்தது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரில் சாமானிய மக்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையால் நடுத்தர வர்க்க மக்கள், வியாபாரிகள் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்று வரம்பு நிர்ணயிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

ஒரு மாநிலத்தில் தேர்தல் முடிந்ததும் அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை காத்திருப்பது அவசியமற்றது. எனவே தேர்தல் நடத்தை விதிகள் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்.

அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளை ஏற்று நடை முறைப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களையும் குழு வில் சேர்க்கலாம். கோடிக்கணக்கான மக்கள் நலன் சார்ந்த இந்த யோசனைகளை தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

கட்டுரையாளர் - வி.ஐ.டி வேந்தர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x