Published : 03 May 2024 02:07 PM
Last Updated : 03 May 2024 02:07 PM

“அர்ப்பணிப்பு மிக்கவர்” - அமேதி காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரியங்கா வாழ்த்து

அமேதி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா

புதுடெல்லி: “அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர்” என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி லால் சர்மா குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காந்தி - நேரு குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வெற்றிக்கு பின்புலமாக இந்த கிஷோரி லால் சர்மா இருந்ததாகவே நம்பப்படுகிறது.

அமேதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில், "கிஷோரி லால் சர்மாவுடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட கால உறவு உண்டு. அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் அர்ப்பணிப்பு கொண்டவர். பொதுச் சேவை செய்வதில் அவருக்கு இருந்த அவரின் ஆர்வம் இதற்கு ஓர் உதாரணம்.

காங்கிரஸ் கட்சி அமேதி தொகுதியின் வேட்பாளராக இன்று கிஷோரி லால் சர்மாவை அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். கிஷோரி லாலின் விசுவாசமும் பணியின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பும் இந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றியைத் தேடித் தரும். அவருக்கு அநேக வாழ்த்துகள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காந்தி குடும்பத்தின் கோட்டையான அமேதியில் ராகுல் காந்திக்கு பதிலாக தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு கட்சிக்கு கே.எல்.சர்மா நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "அவர்களின் குடும்பத்து கோட்டையான தொகுதியில் போட்டியிட கட்சியின் சிறிய தொண்டனான எனக்கு வாய்ப்பளித்தற்காக மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கடுமையாக உழைப்பேன். கடந்த 40 ஆண்டுகளாக அந்தத் தொகுதியில் பணியாற்றி வருகிறேன். கடந்த 1987 இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராக இந்தத் தொகுதிக்கு வந்தேன். அப்போது இருந்து இங்கே இருக்கிறேன். ராஜீவ் காந்தியுடன் நான் எனது பணியைத் தொடங்கினேன். 1987-ல் ராஜீவ் காந்தி என்னை இங்கே அழைத்து வந்தார். அப்போது இருந்து இங்கே நான் இருந்து வருகிறேன். நாங்கள் சோனியா காந்தியை வெற்றி பெற வைத்தோம். ராஜீவும் இங்கே வெற்றி பெற்றுள்ளார்.

ராகுல் காந்தி களத்தை விட்டு ஓடுபவர் இல்லை. அவர் இந்த நாடு முழுவதில் இருந்தும் போட்டியிடுகிறார். வாக்குகளைப் பற்றி யாராலும் கணித்துவிட முடியாது. எல்லாமே வாக்காளர்களின் கைகளில் இருக்கிறது. இன்று நான் பிரியங்கா காந்தியை சந்திப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். காங்கிரஸின் கோட்டையான அமேதியில் கடந்த 2004-ம் ஆண்டு ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், 2019-ம் ஆண்டு தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வெற்றியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி தொடங்கியது. இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடக்க இருக்கிறது. அமேதி மற்றும் ரேபரேலியில் மே 20-ம் தேதி ஐந்தாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x