Published : 03 May 2024 09:48 AM
Last Updated : 03 May 2024 09:48 AM

ஒவ்வொரு இந்தியரும் எங்கள் ஓட்டு வங்கிதான்: கார்கே பதில்

தே.ஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், ‘‘எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து தங்களின் ஓட்டு வங்கிக்கு அளிப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக இருந்தாலும் கூட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாரபட்சமான நோக்கங்கள் உள்ளன. இது குறித்து வாக்களர்கள் இடையே விழிப்புணர்வை பரப்ப வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை பார்க்கும்போது, நீங்கள் நம்பிக்கையிழந்தும், கவலையிலும் இருப்பதுபோல் தெரிகிறது. உங்கள் பேச்சு பிரதமர் பதவிக்கு அழகல்ல. உங்கள் பேச்சில் உள்ள பொய்கள் பலனளிக்காததால், உங்கள் பொய்களை உங்கள் வேட்பாளர்கள் மூலம் பரப்ப நீங்கள் விரும்புகிறீர்கள்.

பரம்பரை சொத்து வரி விதிக்க காங்கிரஸ் விரும்புவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். இந்த வரியை விதிக்க வேண்டும் என தொடர்ந்து கூறியவர்கள் பாஜக முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள்தான். உங்கள் தேர்தல் அறிக்கையில் என்ன உள்ளது, அது என்ன உத்தரவாதம் அளிக்கிறது என்பதை படித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு வாக்காளர்கள் புத்திசாலிகளாக உள்ளனர்.

மக்களிடம் ஆசையை தூண்டும் அரசியலை காங்கிரஸ் பின்பற்றுவதாக நீங்களும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறிவருகிறீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், நீங்களும், உங்கள் அமைச்சர்களும் சீனாவை திருப்திபடுத்தியதைத்தான் நாங்கள் பார்த்தோம். சீனாவை ஊடுருவல்காரர்கள் என கூற நீங்கள் இப்போதுகூட மறுக்கிறீர்கள்.

சீனாவில் இருந்து யாரும் ஊடுருவவில்லை என நீங்கள் கூறியது கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்தியாகம் செய்த 20 இந்திய வீரர்களை அவமதிப்பது போன்றது.

இந்தியா-சீனா இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளில் சீன இறக்குமதி 54.76 சதவீதம் அதிகரித்து 101 பில்லியன் அமெரிக்கடாலரை எட்டியுள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.

உங்கள் கொள்கைகள் மற்றும் உங்கள் பிரச்சார பேச்சால், தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு ஆர்வமில்லை என்பதை இது காட்டுகிறது. கோடை வெப்பத்தால் இது நடைபெறவில்லை.

உங்கள் கொள்கைகளால் ஏழைகள் எரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் அதிகரிப்பது பற்றி பேச உங்களுக்கு விருப்பம் இல்லை. தோல்வியை தவிர்ப்பதற்காக நீங்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதற்கு பதில், கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும்.

இல்லையென்றால், தேர்தல் முடிவடைந்தபின், பிரிவினையை தூண்டும் பிரதமராக நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள். எங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்தியரும் எங்கள் ஓட்டு வங்கிதான். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x