Published : 03 May 2024 08:21 AM
Last Updated : 03 May 2024 08:21 AM

டெல்லி மகளிர் ஆணையத்தில் 52 ஊழியர்கள் நீக்கம்: துணைநிலை ஆளுநர் நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத்தில் 52 ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான சுவாதி மாலிவால் கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லி மகளிர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 19-ம் தேதி அவர் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

முன்னதாக சுவாதி மாலிவால் ஆணைய தலைவராக பதவி வகித்தபோது கடந்த 2016-ம் ஆண்டில் 223 ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தார். இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அவர் கடிதம் அனுப்பினார். ஆனால் விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதலாக ரூ.2 கோடி செலவினம் ஏற்படும் என்றும் துணைநிலை ஆளுநர் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து 223 ஊழியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 223 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் தரப்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையில், விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து துணை நிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “துக்ளக் தர்பார் ஆட்சியைப் போன்று ஒரே நேரத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை எதிர்த்து போராடுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து டெல்லி மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அளித்த விளக்கத்தில், “52 பேர் மட்டுமே பணி நீக்கப்பட்டு உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சுவாதி மாலிவால் கூறும்போது, “எனது எதிர்ப்பை தொடர்ந்து 223 பேர் பணி நீக்கம் என்பதை 52 பேர் என்று குறைத்துள்ளனர். தற்போது டெல்லி மகளிர் ஆணையத்தில் 38 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். 181 மகளிர் உதவி எண், பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு, அவசர உதவி மையம் ஆகியவற்றை 38 ஊழியர்களால் நடத்த முடியுமா?'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x