

மிசோரம் மாநில கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கமலா பேனிவால் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மீறப்படவில்லை என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
மிசோரம் மாநில பெண் கவர்னர் கமலா பேனிவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது நீக்கத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அன்று அறிவித்தார்.
இந்த நிலையில் மிசோரம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து கமலா பெனிவால் நீக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்திய அரசியல் அமைப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மீறியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களூள் ஒருவரான மணிஷ் திவாரி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதில் தரும்விதமாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "ஆளுநர் நீக்கம் விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டப்படியே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகராத்தில் உச்ச நீதிமன்ற விதிமுறைகள் எதனையும் மத்திய அரசு மீறப்படவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தன" என்றார்.
குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவால், கடந்தமாதம் மிசோரம் ஆளுநராக மாற்றப்பட்டார். ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வுபெற இன்னும் 2 மாத காலமே உள்ள நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.