

பிரதமர் மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன் என்று இந்தி நடிகை ரூபாலி கங்குலி தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த26-ம் தேதியும் நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளன. ஜூன் 1-ம் தேதி கடைசி கட்டமான 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.
அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரூபாலி கங்குலி. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது டி.வி. சீரியல்களில் பிரபலமாக உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரூபாலி கங்குலி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தொலைநோக்குத் திட்டங்களை நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன.
அவரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரதமர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பாஜகவில் இணைந்துள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.