

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம் காரணமாக பிரஜ்வலை கட்சியிலிருந்து மதசார்பற்ற ஜனதா தளம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சியான பாஜகவையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் போல் மவுனம் காத்து வருவது வெட்கக்கேடானது.
எல்லாம் தெரிந்திருந்தும் நூற்றுக்கணக்கான மகள்களை சூறையாடிய பேய்க்கு பிரச்சாரம் செய்தது ஏன்? வெறும் ஓட்டுக்காகவா? இத்தனை பெரிய குற்றவாளி இவ்வளவு எளிதாக நாட்டிலிருந்து தப்பியது எப்படி? இவற்றுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.
கைசர்கஞ்ச் முதல் கர்நாடகா வரையிலும், உன்னாவ் முதல் உத்தராகண்ட் வரையிலும், மகள்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு பிரதமரின் மவுன ஆதரவு, நாடு முழுவதும் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துகிறது. மோடியின் அரசியல் குடும்பத்தில் இவர்கள் அங்கம் வகிப்பதால் குற்றவாளிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறதா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.